About

வணக்கம்.

உலகத்தில இருக்க மனுஷங்க எல்லாரையும் ரெண்டு வகையா பிரிச்சிடலாம்… வாழறதுக்காக சாப்பிடறவங்க, சாப்பிடறதுக்காகவே வாழறவாங்க. நான் ரெண்டாவது கேட்டகரி. அதை சொல்லிக்கவே பெருமையா இருக்கு!😂🤣 ‘சோத்துமூட்டை, தீனிப்பண்டாரம், தடிமாடு’ போன்ற பட்டங்களை தவிர்க்க, எங்களை நாங்களே “foodies”னு கூப்பிட்டுக்கிட்டு கெத்தா சுத்துற கூட்டம்!

எந்த நேரமா இருந்தாலும், என்ன மூட்ல இருந்தாலும், தட்டுல சாப்பாட்டைப் பாத்தவுடனே மத்ததை எல்லாத்தையும் மறந்துட்டு அதை மட்டுமே full focus பண்ற இனம் எங்களுது! என்னதான் ஜாதி, மதம், மொழின்னு பிரிஞ்சிருந்தாலும், உணவால ஒண்ணா இருக்கறதுதான் இந்த so-called foodiesஓட சிறப்பு. பயந்தங்கஞ்சியில இருந்து, பெஸ்டோ பாஸ்டா வரைக்கும் ‘எம்மதமும் சம்மதம்’ தான்!!

சின்ன வயசுல ‘நண்பன்’ படம் பாத்துட்டு அதுல நம்ம விஜய் அண்ணா “follow your passion”னு நெஞ்சில கை வச்சுக்கிட்டு சொல்றதைப் பார்த்து இன்ஸ்பையர் ஆகி, chef ஆகலாமா இல்ல food traveller ஆகலாமான்னு மனசுக்குள்ள பட்டிமன்றம் வச்சுகிட்டு இருந்த கேப்புல, சடார்னு கொண்டுபோய் நாமக்கல்ல ஒரு போர்டிங் ஸ்கூல்ல சேர்த்து வுட்டுட்டாங்க! என்னடா வாழ்க்கை இப்படி ஆகிடுச்சே, சரி தப்பிச்சு எங்கயாச்சும் ஓடிறலாம்னு யோசிச்சா, அதையும் பண்ணமுடியாம, ஹாஸ்டல் மெஸ் சாப்பாட்டுக்கு மனசு அடிமை ஆகிடுச்சு!!

டைம்டேபிள் வச்சு படிச்சிட்டு இருந்தவங்க மத்தியில, டைம்டேபிள் வச்சு சாப்பிட்ட ஆளு நான்!😎😋 ஆமா, வியாழக்கிழமை சாயங்காலம் தர்ற வெஜ் சாண்ட்விச்சுக்காக, சரியா நாலு மணிக்கு க்ளாஸ் வாசல்ல வந்து உட்கார்ந்து இருந்து, பெல் அடிச்ச மறுநொடியே உசேன் போல்ட்டை மிஞ்சற வேகத்துல ஓடிப்போய் மசாலா அண்டா பக்கத்துல லைன் கட்டி நின்னுக்குவோம்!!!

என்னதான் நாம strategicஆ ப்ளான் போட்டு, ரெண்டாவது சாண்ட்விச் வாங்கறதுக்கு மாறுவேஷம்லாம் போட்டுட்டு வந்தாலும், கரெக்ட்டா நம்ம கையில ஒட்டியிருக்க மஞ்சள் கறையைப் பாத்தே வார்டன் கண்டுபிடிச்சிடுவாங்க. “மொசப் புடிக்கற நாய மூஞ்சிய பாத்தா தெரியாதா?”ன்னு டயலாக் எல்லாம் சொல்லி நம்மை லைன்ல இருந்து இழுத்துட்டுப் போயிடுவாங்க!!!

இப்ப நினைச்சுப் பாத்தா சிரிப்பா இருக்கு… ஆனா அந்த மஞ்சள் overloaded மசாலா சாண்ட்விச்சோட டேஸ்ட்டை, அதுவும் திருட்டுத்தனமா ரெண்டாவது ரவுண்ட் வந்து வாங்கித்தின்ன ருசியை, இது வரை நான் சாப்பிட்ட எந்த ஹோட்டலோட காஸ்ட்லி சாண்ட்விச்லயும் நான் பாக்கலை.😇😋

Foodies ஓட மூளை இப்படித்தான் வேலை செய்யுமாம். எந்த ஞாபகமா இருந்தாலும், அதை சாப்பாடு கூட சேர்த்து தான் நினைவிருக்குமாம். நான் சொல்லலைப்பா… விஞ்ஞானிகளே சொல்றாங்க. (Associative memory, Thought Conditioning) எனக்கும் வாழ்க்கையோட அதி முக்கிய தருணங்கள் எல்லாமே அன்னைக்கு என்ன சாப்பாடுன்னு ஆரம்பிக்கற நியாபகத்துல தான் இருக்கு.

பத்தாவது கடைசி நாள் பரீட்சை முடிச்சிட்டு சாப்பிட்ட பாணிபூரி… ஹாஸ்டல் போயி ஒரு மாசம் தவிச்சிட்டு ஓடோடி வீட்டுக்கு வந்த உடனே அப்பா வாங்கிட்டு வந்த பால்கோவா… ஆந்திராவுல இருந்து என்னோட இணைபிரியா நட்பா மாறணும்னே விதியோடு வந்த ஸ்வாதி அவங்க வீட்டுக்குப் போயிட்டு வர்றப்போ கொண்டுவர்ற ‘கோங்குரா’ பச்சடி…
மெடிக்கல் காலேஜ்ல சீட்டுக் கிடைச்சதும் தலைகால் புரியாம சந்தோஷத்துல குதிச்சப்போ, பசியே தெரியாத நேரத்துல குடிச்ச லெமன் சோடா…
இன்னும் நிறைய.

‘என்னடா அநியாயத்துக்கு சோறுப் பைத்தியமா இருக்கு’ன்னு நீங்க நினைக்கறது புரியுது. ஏன், எங்க குடும்பமே என்னை இப்படித்தான் பேசும். அதுனால தான், சும்மா சாப்பிடறதை ஒரு வேலையா செய்யாம, அதை ஆர்வமா மாத்தி, சாப்பாட்டைப் பத்திப் படிக்க ஆரம்பிச்சேன். எனவே இப்பல்லாம் “foodie”னு சொல்லிக்கறதில்லை… இன்னும் கெத்தா, “epicurean” தான்!😅

சாப்பிடறதுக்காகவே வண்டியில பெட்ரோல் போட்டு எடுத்துக்கிட்டு நாற்பது கிலோமீட்டர் ட்ராவல் பண்ணின அனுபவமும் இருக்கு, ஒரு படத்துல வர்ற ரெசிபியை from the scratch , ஒரு வெறியோட மூணு மணி நேரம் கஷ்டப்பட்டு சமைச்ச அனுபவமும் இருக்கு.

ட்ராவல் பண்ற ஊருக்கு எல்லாம் போகும்போது, மறக்காம கூகுளைக் கேட்டு, ‘must visit’ ஹோட்டல்களை எல்லாம் மார்க் பண்ணி வச்சு, அந்த ஊரோட heritage siteஐ பாக்க மறந்தாலும், சாப்பிட மட்டும் தவறாம போயிடுவோம்! அதுல ஒண்ணு, ஹைதராபாத் பேரடைஸ் பிரியாணி. ஏர்ப்போர்ட்ல இறங்குன பத்தாவது நிமஷம், குடும்பமா ஆஜர் ஆகியாச்சு பிரியாணிக் கடையில!!

சில ஊர்கள்ல, சாப்பாடுதான் அந்த ஊரோட heritage ஆகவே இருக்கும். விருதுநகர் பொறிச்ச புரோட்டாவும், கோவில்பட்டி கடலைமிட்டாயும் போல. உணவைப் பொறுத்த வரையில், ஒவ்வொரு பருக்கையும் ஒரு கதை சொல்லும். போகும் ஊர்களில் ரோட்டுக் கடையில் நின்று அந்தக் கடைக்காரர்களிடம் அவர்களைப் பற்றியும், ஊரைப் பற்றியும் விசாரித்த அனுபவம் இருக்கா? நாம வாயைத் திறந்து ஒரு கேள்வி கேட்டாலே போதும், ஒரு புத்தகமே எழுதற அளவுக்கு வரலாற்றை சொல்வாங்க அவங்க.

இந்தத் தளத்திலும், அதுபோன்ற கதைகளையும், நினைவுகளையும் தான் நான் பதிவு பண்ண நினைக்கறேன். அன்றாடத் தேவையில் ஒன்றான உணவை, வெறும் sustenanceஆ மட்டும் பாக்காம, அதை ஒரு lifestyleஆ பாக்கப் போறோம்…

பற்பல ஊர்கள், அவ்வூர் உணவுகள், அதன் கதைகள், வரலாறுகள், அதனோடு நான் கொண்ட ஞாபகங்கள், அப்பப்போ சில ரெசிபிக்கள். இவ்ளோதாங்க இந்த தளம்!

விரைவில் ஒரு அட்டகாசமான உணவு-நினைவோடு உங்களைச் சந்திக்கிறேன்.

அதுவரையில் அன்புடன்,
மது.

நமக்கு சோறுதான் முக்கியம்!!!😇😌